மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

செவ்வாய், 5 ஜூலை, 2011

மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்

மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்
(மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை)
யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்று சொல்ல விரும்பும் அண்ணாதுரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் எனக்கு இடம் தந்தாலும் அதிலே எனக்கொரு வரம்பிடப்பட்டிருந்தது. கட்டுரை எழுதுவார் கவனிக்க வேண்டிய நெறிமுறைகளில் ஒன்று. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றது போலத் தமது உயர் கொள்கையைத் தான் தழுவல் வேண்டும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி என்று உயர்வு நவிற்சியும் தற்புகழ்ச்சியும் கருதி உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறான, உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாக் கொள்கைகளையயல்லாம் விட்டுவிட வேண்டும் என்றிருந்தது. நான் பேருக்கு மட்டும், துரையண்ணனாரின் - கட்டளைக்கிணங்கி ஒரு கட்டுரை எழுதி விட்டுத்துவிட்டு நான் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த மாநாட்டிலே எனக்கு ஒரு தக்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நமது புரட்சி நடிகர், மறைந்த குமரிக் கண்டத்தையே புரட்டி நமக்கு ஒரு படம் வழிக்காட்டுகின்றவர், இராமச்சந்திரன் என்னும் அழகுமதியாருடைய ஆட்சியிலே இந்த நிலைமை வாய்த்ததற்காக நான் இறைவனை மிகவும் வழுத்துகின்றேன்.
இப்பொழுது பேசப்படும் பொருள் மிக விரிவானது. ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்பதாகும். பழங் காலத்திலெல்லாம் பொதுவாகக் கடவுள் எல்லாவற்றையும் உலகத்தைப் படைத்த போது மற்ற உயிரினங்களையும் படைத்தார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டு நடுவிலே சார்லசு தார்வின் தோன்றிய பின்பு ஒரு திரிவாக்கக் கொள்கையினாலே இந்த உயிரினங்களெல்லாம் தோன்றி வளர்ந்து வருகின்றன என்ற கொள்கை பரவி வருகின்றது. நான் அந்த ‘EVOLUTION’என்பதைத் ‘திரிவாக்கம்’ என்று சொல்ல விரும்புகின்றேன். ‘ஒன்று திரிந்து இன்னொன்றாவது’ என்று பொருள். ஆனால் பல்துறை அறிவியலாளர் இந்தக் கொள்கையை மிகக் கடைப்பிடித்து வந்தாலும் இது சில அறிஞர்களாலே ஒப்புக்கொள்ளப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழக மாநிலக் கல்லூரியிலே விலங்குநூற் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ‘ஏனக்கு’(ENOCH) என்பவர் ‘திரிவாக்கம் அல்லது உருவாக்கம்’ (Evolution or Creations) என்று ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதன் இறுதியிலே ‘ரிசென்சேசன்’ (Recentation) என்று ஒரு பகுதி இருக்கிறது. அது என்னவென்றால் ‘கொள்கையை மீட்டுக்கொள்ளுதல், தன் கொள்கையைத் தானே மறுத்தளித்தல்’ ( குறிப்பு-1 ஐக் காண்க) என்பதாம். இளமையிலேயே பேரூக்கத்தினாலே ஒரு கொள்கையைப் பரப்பினேன். மற்றவர்கள் அதைக் குருட்டுத்தனமாகப் பரப்பித் துரும்பைத் தூணாக்கி , ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கி உலகத்திலே எல்லாம் பெரிய மயக்கத்தை உண்டு பண்ணி விட்டார்கள்’ என்று மிக வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். அதற்கு மதிப்புரை வழங்கியவர் ‘நெசுபீல்டு’’( J.C.Nesfield )என்று கருதுகின்றேன். அவர் இங்கிலாந்திலேயே ஒரு பெரிய மருத்துவ அதிகாரி. அவர் அதற்கு மதிப்புரை தந்திருக்கிறார். எனக்கும் அந்தக் கொள்கைதான். மாந்தனை அடுத்துச் சில குரங்குகள் இருந்தன. அவ்வளவுதான். ஆந்தரோபாய்டு (Anthropoids ) மாந்தர் போலிகள் என்ற திட்டத்தில் சில குரங்குகள் இருந்திருக்கின்றன. அவ்வளவுதான்! பல குரங்குகளைப் பல இடங்களிலே கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்! எங்குத் தாடை எலும்பு ஒன்று கிடைத்தாலும், மண்டை ஓட்டு உச்சி கிடைத்தாலும் ஒரு பல் கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு எவ்வளவோ பெரிய மாலையைக் கட்டி வைத்திருக்கிறார்கள்! இதிலே அந்தக் குரங்கினத்திலிருந்தே மக்கள் முதல் மாந்தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். இப்போது பல வகையான குரங்குவகை சேர்ந்ததினாலே ஆர்தர்லோதேசார் (Arthelothesar ) ஆர்தரோபிதர்சாந்தர போல் (Arthopithersanthropol ) என்கிறவர் தென்பால் குரங்குமாந்தன், அதற்கப்புறம் பிதகேந்தரபசு எரக்டசு (Pithecanthropus Erectus) நிமிர்மாந்தன். அதன் பிறகுதான் மற்ற மாந்தர்களெல்லாம். உகோமா எரக்டசு ( Home Erectus/ Capiens) உகோமா சேபியன்சு என்றது கடைசியாக அந்த மாந்தன் என அவர்கள் கருதினது.
தமிழ் மறுக்கப்பட்டிருப்பதினாலே, மேனாட்டார் தமிழ் அறியாததினாலே ஐரோப்பியர்கள் தங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவர்களே தங்களை முதல் மாந்தன் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள், கடைசியிலே உகோமா சேப்பியன் (Homosapien) என்று வருகிறது. மதிமாந்தன் -அந்த மதிமாந்தன் தான் தமிழன். அவன் காலத்திலிருந்துதான் இந்த மாந்தன் வரலாறு தோன்றுகிறது. குரங்கிற்கும் இவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மாந்தன் அங்கே தோன்றினான். முதற்காலத்திலே பேச்சில்லாமல் இருந்தது. அவ்வளவுதான்.
இப்பொழுது குழந்தை இருக்கிறது, அந்தக் குழந்தையை நீங்கள் மக்கள் உறவில்லாதபடி தனியிடத்தில் பிரித்துவைத்து வாழச்செய்தீர்களானால் ஒரு மொழியும் பேசாது. அதை துணிந்து செய்வதாயிருந்தால் செய்து பாருங்கள். (மென்னகையுடன்). ஒரு மொழியும் பேசாது, சிலசில அசைவுகளாகவும் சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் பல ஆயிர இலக்கக்கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியடைந்த மொழிகள் இப்போது ஒரே முறையாக அவன் பேசுகிறான். இப்போதைய சொற்பயிற்சி முறையிலிருந்து. இப்பொழுது ஓர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி இருக்கிறது- அதிலே சில கற்பிக்கும் முறைகள் சொல்லப்படுகின்றன. அவையயல்லாம் ஒருவராலேயே ஒரே காலத்தில் கண்பிடிக்கப் பட்டவையல்ல. பல காலத்திலே பலர் கண்டுபடித்த முறைகளை யயல்லாம் இப்பொழுது ஒருங்கே ஒருவர் கற்றுக் கொள்கின்றார். அது போலவேதான் இந்த மொழியானதும் கற்றுக்கொள்ளப்படுகிறது. சமற் கிருதத்தைப் பற்றிப் பின்னாலே சொல்லுவேன், அது எப்படிப்பட்ட மொழியயன்று.
குமரிநாடு மிகப்பழைமையானது. இதைப் பற்றி மேனாட்டாரும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். அதிலே கிளேற்றர் என்பவர் ( Sclater ) ஆங்கிலேயேர், அந்த இலெமூரியாக் கண்டத்தை - இலெமூர் என்கிற தென்கண்டத்தை ஆய்ந்து அதற்கு அந்தப் பெயரிட்டார். ‘இலெமூர்’ என்றால் ‘மரநாய்’ என்று பொருள் அவ்வளவுதான். ஒருவகை மரநாய். அந்தக் குரங்கிற்கு முந்தின பிறப்பு அது. அங்கு இலெமூர் என்ற மரநாய் மிகுந்திருத்தினாலே அதற்கு இலெமூரியா என்று பெயர் கொடுத்திருக்கிறார். நாம் இதைக் குமரியா என்று மாற்றிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான். இந்த குமரி நாட்டிலே மாந்தன் தோன்றினான். இப்பொழுது முதலாவது தமிழ் முதன்மொழி என்பதற்கு பல சொற்களே போதுமானவையாக இருக்கின்றன. இரண்டே இரண்டை மட்டும் சொல்லி முடித்துவிடுகின்றேன்.
இப்பொழுது மகன் என்ற சொல்லானது பெரும்பாலும் புதல்வன் அல்லது றீநுஹி என்ற பொருளிலே வழங்கினாலும்
(முன்) - மன் - மான் (Man- மனிதன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
அது பழைய காலத்திலே ஆளப்பட்டது. இப்பொழுது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் வந்தார்கள் என்று சொல்வதைப் பழங்காலத்திலே ஒரு மகனும் ஒரு மகளும் வந்தார்கள் என்று சொல்லிவந்தார்கள். அதில் இந்த மகன் என்ற சொல்லானது பிற்காலத்திலே மான் - மன் - என்று திரிந்திருக்கிறது.
பெருமகன் என்பது பெருமான் என்று திரியும்.
பெருமான் என்பது பெருமன் என்று குறுகும்.
சொல் பெரும், காண் பெரும் என்று ஒருவரை விளிக்கும்பொழுது அது பெருமன் என்று இருந்தால்தான் அந்த விளி ஏற்கும்.
பெருமான் என்று இருந்தால் பெருமானே என்று விளிக்கவேண்டும். அந்த ‘மன்’ என்ற சொல்லிருக்கின்றதே அது ஆங்கிலத்திலே man என்றிருக்கிறது. ஆங்கிலம் என்று சொல்லும் பொழுது தனியாய் ஆங்கிலம் என்றே நாம் கருதி விடக்கூடாது . ஆங்கிலம் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய மொழி. அது இந்த தியூத்தானியம் என்ற பிரிவைச் (Teutonic) சேர்ந்தது. உலகத்திலே உள்ள சிறந்த மொழிகள் எல்லாவற்றையும் மாக்கசுமுல்லர் (F.Maxmuller) மூன்று பெரும் பிரிவாக வகுத்திருக்கின்றார். (க) ஆரியக்குடும்பம் (Areyan), (உ) சித்தியக் குடும்பம் (Scythian) எனப்படும் துரேனியக்குடும்பம் (Turanian), ( ங) சேமியக்குடும்பம் (Semitic) என்று அதற்குள்ளே - தியூத்தானிக் என்பது ஒன்று. தியூத்தானிக்கைச் சேர்ந்தது இந்த ஆங்கிலமொழி. ஆங்கிலத்துக்கும் நமக்கும் மிகுந்த நெருக்கமுண்டு. அதைச் சொல்வதற்கு நேரமில்லை. அது நூல்வடிவாகப் பின்னாலே வெளிவரும், உலகமுழுவதும் அறிவதற்கு . ( குறிப்பு-2)
இந்த மன் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்திலே man என்று இருக்கிறது. அதைத்தான் சமற்கிருதத்திலே அவர்கள் மனு என்று விரித்தார்கள். இந்த மனுவிலிருந்துதான் மனு­ என்ற சொல் பிறகு திரிகின்றது. ஆகவே இதற்கெல்லாம் மூலம் இந்த மன் என்ற சொல்தான். அவர்கள் தமிழ் அறியாததினாலே, thinking man - man is a thinking anima - அவன் கருதுகின்ற ஆற்றலுடைய ஓர் உயிரினம் - உயிரிப்பொருள். ஆகையினாலே munan (to think) அதிலிருந்து வந்தது என்று கருத்துச் சொல்வார்கள். ஆனால் அந்த மன் என்கிற சொல் கருதுதலைக் குறிக்கிறது. மனு என்ற சொல்லானது தமிழ் ‘முன்’ என்றதிலிருந்து வந்தது.
முன்னுதல் என்றால் கருதுதல் தமிழிலே. அப்படியே ஆங்கில பேரகர முதலியிலே முனன் (munan) என்றே இருக்கிறது. (Munan to think) என்று இதே வடிவத்திலே இருக்கிறது. முன் என்றால் கருது என்று பொருள். அது வேறு சொல். பழைய நிகண்டுகளைப் பார்ப்பீர்களானால் மனத்திற்கு முன்னம் என்றிருக்கும்.
முன்னம் - முனம் - மனம் ( உள்ளம்).
உகரம் அகரமாகத் திரியும் போது மனம் என்றாகிறது. ( குறிப்பு 3) அந்த மனம் என்பதை மனஸ் என்பார்கள் சமசுகிருதத்திலே. மகர ஈறு ஸகர ஈராக மாறும் சமசுகிருதத்திலே. அது இலத்தீனத்திலே மெனசு (Mens) என்றிருக்கிறது. இப்படி மேலை ஆரிய மொழிகளெல்லாம் திரிந்திருக்கின்றன. இன்னும் ஒரே சொல் ‘ஊர்’ எனும் பேரை நான் சொல்கிறேன்.
இங்கே இந்தியாவிலே உள்ள இந்தூர் முதலான பெயர்களை மட்டுமல்ல, அங்கே பாபிலோனியா நாட்டிலே ஊர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்தப் பேருக்கே - அந்த சொல்லிற்கே அக்கேடியன் (Akkadian) மொழியிலே - அந்த சுமேரியன் மொழியிலே City என்று தான் பொருள். அதே பொருளிலே தான் தெற்கே வழங்கினது, குமரிநாட்டிலே இந்தச் சொல்.
உர்- உல் - உறு - உர் - ஊர்
‘உல்’ என்பது ‘உறு’ என்று இப்போது வழங்குகிறது.
வல்லினத்திலே உகரம் சேர்ந்த றகரம். பழைய காலத்திலே ‘உற்’ என்று தான் இருந்தது.
உர் - உறு , உர் -ஊர்
உர் -உறு என்றால் பொருந்து என்று பொருள் அவ்வளவுதான். அது வல்லினமாகத் திரியும் பொழுது வல்லினமெய்யாகத் தமிழிலே வழங்காமையினாலே உகரம் சேர்ந்து உறு என்று வருகிறது. ( குறிப்பு-4)
உறுதல் என்றால் பொருந்துதல் அவ்வளவுதான். அதேதான் ‘உர்’ என்பதற்கும்.
மொத்த ஐந்தினை நிலங்களிலும் மக்கள் நிலைத்து வாழமாட்டார்கள். பெரும்பாலும் நாடோடிகளாக இருப்பார்கள். இந்த மருதநிலத்திலேதான் மக்கள் நிலைத்து வாழ்வார்கள். அதனாலே முதன் முதலாக நகரிகம் என்ற சொல்லிலிருந்துதான் நாகரிகம் என்று வருகிறது. (நகர்-நகரகம்-நகரிகம்- நாகரிகம்)
நகரத்திலேதான் மக்கள் திருந்தியிருப்பார்கள். இலத்தீனில் கூட Civilization என்பது Civilor நகரத்தின் பெயரிலிருந்துதான் வருகிறது. இந்த ஊர் என்கிறதும் அப்படித்தான். முற்காலத்திலே பார்த்தாலும் மருதநிலத்து ஊரைத்தான் குறித்ததும். இப்பொழுது நாம் யாரைப் பார்த்தாலும் எந்த ஊரப்பா?, உனக்கு? யாரய்யா? உங்கள் ஊர் என்ன? என்று கேட்கிறோம். அந்தக்காலத்திலே எப்படி வழங்கினது என்றால், என்னய்யா? எந்த ஊர்? எந்தப்பாடி? என்று தான் கேட்பார்கள். பாடி அல்லது சேரி என்று இருந்தால் முல்லை நிலத்து ஊராக இருக்கவேண்டும்( குறிப்பு5). வேறு ‘துறை’ அல்லது ‘பாக்கம்’ என்பது நகரம் உண்டான பிற்பாடு ஏற்பட்டது. துறை என்பது காயல் என்பது போல இருந்தால் அது நெய்தல் நிலந்தான் என்பதைக் குறிக்கும். இப்படி இந்த ஊர் என்ற சொல் கிறித்துவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே (B.C 3000) அப்பொழுதுதான் அந்த ஊர் என்ற பெயர் ஏற்பட்டது (குறிப்பு 6). அந்த ஊரிலேதான் ஆபிரகாம் என்ற ஒரு பெருந்தலைவன் இருந்தான். ஆப்ரகாம் (Abraham) என்று இருந்தாலும் சரி.
முதல் சொல் அப் (புணு). ஆப் என்றால் அப்பன்
இன்றைக்கும் அரபியிலும் அப்பன் என்பது ஆப் என்றுதான் குறிக்கிறது. இந்த அப்பன் , அம்மன் அம்மை இந்த இருசொற்களும் உலகத்திலே ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் வழங்குகின்றன. இந்த ஒன்றே போதுமானது தமிழ் உலக முதன் மொழி என்பதற்கு. அப்பன் அந்த ஆப் (Ab) அரபியிலும் ஆப் என்றுதான் இருக்கிறது. அம்மையை ஆம் - உம் என்றுதான் சொல்வார்கள். இதோடு நான் நிறுத்தி விடுகிறேன்.
இப்போது தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து இருக்கிறது. தொல்காப்பியம் தான் முதல் இலக்கணம் என்பது போலத் தவறாக - மிக தவறாக சொல்லப்படுகிறது. அப்படி அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நாம் ஒருக்காலும் முன்னேறவே முடியாது என்று நான் நினைக்கின்றேன். சொல்கின்றேன்.
தொல்காப்பியம்தான் முதல் இலக்கணம் என்று சொல்கின்றவர்கள் அதை வைத்துக்கொண்டு தமிழனுடைய பெருமையை நிலைநாட்ட முடியுமென்று கருதுகிறவர்கள் யார், எப்படிப்பட்டவர் என்று கேட்டால் - கொடிக்கம்பத்தின் கீழே பிள்ளையாரைக் கண்ட உடனே இதுதான் கோயில் என்று வணங்கிவிட்டுப் போகிறவர்களைப்போல் இருக்கின்றார்கள். கொடிக்கம்பத்திற்குப் பின்னால் என்ன செய்யவேண்டும். முதல் மண்டபம் தாண்டி அதற்கப்புறம் இடை மண்டபம் தாண்டி உண்ணாழிகைக்குப் போக வேண்டும். அந்த உண்ணாழிகையை இப்போது கர்ப்பக்கிரகம் என்று சொல்கிறார்கள். பழையகாலத் தமிழப்பெயர் உண்ணாழிகை. திரு என்ற சொல் சேர்த்துக் திருவுண்ணாழிகை என்றுசொல்லப்படுகிறது. இது கல்வெட்டில் இருக்கிறது. நான் அமைத்துக்கொண்ட சொல்லன்று. திருவுண்ணாழிகை - அந்த கர்ப்பக்கிரகம் வரையிலே போக வேண்டும்.
இதற்கு மூன்று அறிவியல்களைப் படித்திருக்கவேண்டும். ‘உலக வரலாறு’ (The word history) அதற்குப்பின் ‘ஒப்பியன் மொழிநூல்’ (Comparative Philology) அற்குப்பின்பு குமுகாயப் பண்பாட்டு மாந்தநூல் (Social and Cultural Anthropology) இந்த மூன்று நூல்களும் படித்திருந்தால்தான் உண்மையாகத் தமிழனுடைய பெருமையை அறிய முடியும். தொல்காப்பியத்தையும் உணரமுடியும்.
முதல் நூற்பாவில் எடுத்த அடியிலே அவர் என்ன சொல்கிறார்,
‘எழுத்தெனப் படுப.. முப்பஃதென்ப’
‘என்று சொல்வார்கள் அறிஞர்கள்’ -அவ்வளவுதான். நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறார், ‘என்மனார், புலவர் ‘மொழிப’, நெடுக எங்கெங்கே இடமிருக்கிறதோ அங்கங்கே எல்லாம் இந்த சொற்றொடரை ஆண்டு கொண்டே போகின்றார். ஓர் எழுத்திலக்கணத்தை எழுதக் கூடமுடியாது.
எழுத்தென்றால் நான்கு நிலைகள் இருக்கின்றன.
முதலாவது படவெழுத்து (Picture writing /Arowgraph/ Pictograph) -(குறிப்பு 7).
இரண்டாவது கருத்தெழுத்து (Ideograph)
மூன்றாவது அசையயழுத்து (Syllabary)
நான்காவது ஒலியயழுத்து (Phonetic Characters)
இந்த நான்கு எழுத்தும் தலைக் கழகக் காலத்திலேயே கடந்துவிட்டன. அந்த நிலையில் இத்தமிழ் தோன்றியது. முதலாவது இந்த நெடுங்கணக்கு ஏற்பட்டதே தமிழில்தான் எல்லாப் பொருள்களையும் அறிந்தாய்ந்து பார்த்தார்கள்.
ஒன்று தனி உயிர் (life)
மூன்றுவகைப்பட்டிருக்கின்றன பொருள்கள்
ஒன்று தனி உயிர் (life)
உயிர் அல்லாத ஒரு பொருள் (Lifeless)
அல்லது ஒர் உயிரும் ஓர் உடம்பும் கலந்து-உயிர்மெய் (Living body)
உயிர், மெய், உயிர்மெய். இப்பொழுது உயிர் ஆவி போகிறது என்கிறோம். பேய் பிசாசு என்கின்றனர் ஆவியினர். உடம்பு இறந்த பிற்பாடு அதையயல்லாம் உயிர் போயிற்று ஆவி போகிறது என்று சொல்கிறோம். இறைவன் ஆவிவடிவாய் இருக்கிறான் என்று நாம் சொல்கிறோம். அதெல்லாம் உயிர், மெய் யயன்று சொல்வது நாம் பார்ப்பதெல்லாம். உயிர் இல்லாத பொருள் எது எது இருக்கிறதோ அது எல்லாம் ‘உயிர்மெய்’ என்று சொன்னால், மரம் முதல் மாந்தன் வரையிலே எல்லாம் உயிர்மெய்கள். இந்த மூன்று (நிலையையும்) இயல்பையும் கண்டார்கள். ( சில எழுத்தானது) உயிர் எழுத்தானது தானே ஒலிக்கிறது. இயங்குகிறது. மெய்யயழுத்து உயிரின் உதவியின்றி இயங்குவ தில்லை. இந்த உயிர்மெய் எழுத்தானது உயிரும் மெய்யும் ஒன்றாகச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து அந்த மூன்றுக்கும் தனிவடிவம் முதன்முதலாக அமைத்தவன் தமிழன்தான். அதனால்தான் அதற்கு நெடுங்கணக்கு என்று பெயர். முதலிலே, உயிரும் மெய்யும் சேர்ந்தது குறுங்கணக்கு. உயிர்மெய்யும் சேர்ந்ததால் நெடுங்கணக்கானது. இதற்குப் பின்னாலேதான் அந்த சமற்கிருதமோ மற்றவையோ வருகின்றன.
இந்த மாந்தன் - இங்கு - குமரி நாட்டிலே தோன்றினான். காலம் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகிறது. அவ்வளவுதான். அறிவு வளர்ச்சியடைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. வேறு இடம் செல்லவேண்டும். அப்பொழுது தான் மக்கள் பரவல் தொடங்குகிறது. தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of Tamils ) இந்த நூலை யாரும் படிக்காதிருந்தால் படித்துவிட்டுங்கள், இராமச்சந்திர தீட்சிதர் எழுதியது. நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இப்போது பாராட்டப்படுகின்ற தமிழ்ப்புலவர்கள் , சொல்லப்போனால் அவர்களைவிட மிகுதியாகப் போற்றப்படத் தக்கவர்கள் இரு வரலாற்று ஆசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Ayengar) அதற்கப்புறம் இராமசந்திர தீட்சிதர் (V.R.Ramachandra Dikshitar) இந்த இருவரும் இல்லாவிட்டால் நாம் பல செய்திகளுக்குச் சான்று காட்டமுடியாது. ஆகமம் எப்போது ஏற்பட்டது? கோயில் வழிபாடு எப்போது எற்பட்டது? யாரால் ஏற்பட்டது, எதனாலே ஏன் ஏற்பட்டது? என்று நன்றாக தெளிவாக History of Tamils - தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் குறித்துள்ளார்.
அது ஒன்றே போதும். மற்றதை எல்லாம் போய்க் காட்ட வேண்டிய தில்லை. பிராமணர்களிடத்தில் நம் மதத்தலைவராக - எப்படித் தலைவராக இருந்தாலும் சரிதான். அவர்களிடம் நாம் போய்க் கேட்டோமானால், அவர்களுடைய கருத்துக்களைதான் தெரிவிப்பார்கள்.
நண்டைச்சுட்டு நரியைக் காவல் வைப்பது (To set the Fox to keep the Geese) என்பார்கள். ஆகையினாலே நம்முடைய கருத்திற்கு மாறானவர் களிடத்திலே நாம் போய் அவர்களுடைய கருத்தைக் கேட்கக்கூடாது. இப்படி ORGIN AND SPREAD OF TAMILS (தமிழரின் தோற்றமும் பரவலும்). இதைக் கால்டுவெல் நன்றாக எழுதியிருக்கிறார். அந்த அசைநிலைக்காலத்திலேயே பிரிந்து போனவர்கள் யார்? கொளுவு நிலைக் காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? புணர்நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பகுசொல் நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த ஓட்டு நிலைள ( அதாவது இணை நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிரிநிலைக் காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த இடைநிலைக் காலத்தில் பிரிந்து போனவர்கள் யார்?
இவற்றையயல்லாம் அந்த மொழிநூல் வரலாற்றில் இருந்து நாம் அறிகிறோம். ஆங்கிலச் சொற்களை நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன். தவிர, ஆங்கிலச் சொற்களையயல்லாம் இங்குச் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இப்படி பல்வேறு நிலையிலே தமிழ் பிரிந்து போயிருக்கிறது.
தமிழுக்கு அந்த Affiliation என்கிற இசைவே அந்தக் குறிப்பே தமிழுக்குப் பொருந்தாது.... பிள்ளையைப் பெற்றோரோடு இணைப்பது போலவும் கல்லூரி பல்கலைக் கழகத்தோடு இணைப்பது போலவும் கிளைமொழியைத் தாய்மொழியோடு இணைக்கிற இணைப்பைத் தான் Affiliation என்று சொல்ல வேண்டும்.
பாண்டாரகர் கால்டுவெல் (Dr. Caldwell) ஒர் உண்மையை நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப்போய் விட்டார். எல்லாமொழிகளிலும் சிறப்பாக ஆரிய மொழிகள் எல்லாவற்றிற்கும் எந்தச் சுட்டுச்சொற்களுக்கும் மூலம் தமிழிலுள்ள ஆ (அ), ஈ(இ), ஊ(உ) தாம். இந்த மூன்று சுட்டெழுத்துக்களிலிருந்துதான் எல்லாச் சுட்டெழுத்துச் சொற்களும் Demonstrative pronouns) தோன்றின ( குறிப்பு 8). எப்படி அந்தச் சொல் ‘அ’ விலிருந்து அவன், அங்கே இந்தச் சொற்களெல்லாம் எப்படி அகரத்திலிருந்து உண்டாயினவோ அப்படித்தான் என்பது இகரத்திலிருந்தும், உண்டு என்பது உகரத்திலிருந்தும் வந்தன என்பது கருத்து. இந்தச் சொற்கள்தான், மூன்று சுட்டுச் சொற்களிலிருந்து தான் ஆரியமொழிகளிலுள்ள அத்தனைச்சுட்டுச்சொற்களும் தோன்றியிருக்கின்றன. மிகத் திட்டவட்டமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை இப்போது நாம் ஆய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.
ஆகையினாலே அந்த மேனாட்டு ஆய்வாளர்கள் தமிழ் அறியாததினாலே சமற்கிருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு (Divine Theory, Nature Theory, Pooh Pooh Theory, Ding Dong theory, Bow-wow theory, Gesture theory, To-he theory, Contact theory, Contract theory) ( தெய்வக்கொள்கை , இயற்கைக் கொள்கை, குறிப் பொலிக்கொள்கை, மணியயாலிக்கொள்கை, ஒப்பொலிக்கொள்கை, சைகைக்கொள்கை, அயாவுயிர்ப்புக்கொள்கை, தொடர்புக்கொள்கை, ஒப்பந்தக்கொள்கை இப்படியான மொழித் தோற்றக் கொள்கைகள்) இப்படி, அதிலே இன்னொன்று மிகவேடிக்கையானது. செசுபர்சன் (Jesperson) சொன்னது. பாட்டொலிக் கொள்கை (Musical Theory). அதாவது Primitive Theory.. அதற்கப்புறம் கடையாக (குறிப்பு 9) மானெசு உதேசு என்கிறபெரிய மொழிநூல் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்கா Animal cried theory என்று ஒன்றைப் புகுத்தியிருக்கிறார். அதாவது விலங்கினத்தினுடைய ஒலிகளிலிருந்து தான் மாந்தனுடைய மொழியின் தோற்றத்தை நாம் காண முடியும் என்று எழுதியிருக்கிறார். முட்டாள்தனமான கருத்து, இந்தப் பேசுதற்குரிய தன்மையே மாந்தனுக்கு, மாந்தன் நிலையிலேதான் தோன்றுகிறது. பலவகையான ஒலிகள் இருக்கின்றன. மெய்தான் ஆனால் இந்த மொழியானது எந்த விலங்கினத்துக்கும் தோன்றாது. விலங்கு எவ்வளவுகாலம் ஆனாலும் அப்படியேதான் இருக்கும்.
இந்த Ply genesis monogynous அல்லது Poly gamy monogamy ஒருதாய்ப்பிறப்பு பலதாய்ப்பிறப்பு ஒருவகைத் தோற்றம் பலவைத் தோற்றம் என்று அவர்கள் சொன்னாலுங்கூட அதுவும் ஒருமுறை நடந்ததாகத் தான் கூறுவார்கள். அதிலே ஒர் ஒழுங்கு இருக்கிறது என்று தெரிகிறது. எல்லாம் சேர்ந்து ஒரு கண்ணறையிலிருந்து (Cell) எல்லா உயிரினமும் சேர்ந்து மாந்தன் அல்லாத உயிரினங்களெல்லாம் சேர்த்து ஒரு கண்ணறையிலிருந்து தோன்றின என்று சொன்னால் அந்த செல் லுக்கு எப்படி உயிர் உண்டானது என்று ஒரு கேள்வி எழுத்தானே செய்யும்? ஆகையினாலே இறைவனுடைய ஆற்றல் என்று சொல்வதினாலே - நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதனாலே பெரிய கேடில்லை. இப்பொழுது பாருங்கள் அமெரிக்காவாக இருக்கட்டும், நியூயார்க்காக இருக்கட்டும். இலண்டனாக இருக்கட்டும். உலகில் கல்வி, நாகரிகம், பண்பாடு, அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிற்கும் தலைசிறந்த இடங்கள் என்று சொல்லப்படுகின்றன. அங்கு ஒரு கால்மணி நேரத்திற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு -ஒரு கால்மணி நேரம் அதற்குள் அரசாட்சி நீக்கப்படும். அந்தக் கால்மணி நேரங்கூட எவன் என்ன வேண்டுமானாலும் அரசாட்சி செய்து கொள்ளலாம். தண்டனை இல்லை என்று மட்டும் ஆணை போடுவதாயிருந் தால் என் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த இருபத்தைந்து கோள்களும் அதற்கு மேலுள்ள பல நாள்களும் கதிரவன் என்ற சுடரும் எப்படி நாள்தோறும் இயங்கிவருகின்றன, அதை அப்புறம் இயங்குகிறவன் ஒருவன் வேண்டும்? இல்லையா? அதற்கு என்ன உயிரா இருக்கிறது? ஞாலத்திற்கு உயிரில்லை. கதிரவனுக்கு உயிரில்லை. அது பொருள் அவ்வளவுதான். எரிகின்ற பொருள் அதுவும் நம்முடைய விளக்கெல்லாம் அந்த எண்ணெய் இருக்கின்ற வரையில்தான் எரியும். அது எவ்வளவோ காலமாக எரிந்துக்கொண்டு வருகிறது. இன்னும் எரியப்போகிறது. ஆக இதற்கெல்லாம் - இயக்குகின்ற ஒரு தலைவன் இருக்கத்தான் செய்யும். எத்தனைக் கோடி மக்கள் இப்போது இருக்கிறார்கள். இத்தனைப்பேர் இங்கேயே நாம் எளிதாய் அடையாளம் கண்டுகொள்கிறோம். இந்த நிலையிலேயே இந்தியாவில் எத்தனைக்கோடி மக்கள் -எழுபது கோடி மக்கள் -இன்னும் போகப் போகப் பெருகிக்கொண்டே போகிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா இல்லையா? இப்படியயல்லாம் இறைவனே ஒர் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். ஆகையினாலே சும்மா இரண்டொரு சான்றுகளைச் சொல்கிறேன். சொன்ன தார்வீனே பிற்காலத்திலே தவற்றை உணர்ந்து -அந்தப் பொத்தகத்திலே எழுதப் பட்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம்.
ஆகவே மக்கள் பல திசைகளிலே பிரிந்து போனார்கள். அதிலே கொஞ்ச நாகரிக நிலையில் இவர்கள்- பாபிலோனியர்கள் பிரிந்து போனார்கள். அதனாலேதான் ‘ஊர் ’என்று அங்குப் போய்க் குடியேறினான். அப்பன் என்று பேர் கொண்ட ஆபிரகாம் அங்குப் போய்ச் சேர்ந்தான். அதற்கப்புறம் சேமிய மொழிகள் தோன்றின. பிறகு ஆரிய மொழிகள் தோன்றின. கிரேக்க இலத்தீன் ஐரோப்பிய நாகரீகம் அத்தனைக்கும் மூலம் பாபிலோனிய நாகரிகந்தான் என்று பாபிலோனிய வரலாற்றிலே (Babylonic History) இருக்கிறது. பாபிலோனிய நகர வரலாற்றிலே சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினாலே தமிழ் மிக மிக முந்தியது.
இருக்கு வேதந்தான் உலகத்திலேயே முதன் முதலாக எழுதப்பட்ட சான்றென்று - மொழிச் சான்றென்று‡ சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இல்லவே இல்லை! தொல்காப்பியத்தை எடுத்துக்கொண்டாலே போதும். தொல்காப்பியம் அவர்கள் எழுதினது அல்ல. எப்படி சொல்லதிகாரம் இருக்கிறதோ அதற்கு மேலே பொருளதிகாரமும் ஒன்று இருக்கிறது. அந்தப் பொருளதிகாரத்திலே செய்யுளும் அணியும் பிற மொழிகளுக்கும் பிற்காலத்திலே தனித் தனியாகத் தோன்றினவென்று நாம் ஒப்புக்கொண்டாலும் ‘பொருள்’ என்கிற இலக்கணமானது எல்லா மொழியிலும் இல்லாத ஒன்று. அது ஒன்றே போதும். தமிழரே உயர்ந்த நாகரித்தனர் என்று உயர்த்துவதற்கு.
எழுத்தாலே சொல் ஏற்படுகிறது. சொல்லாலே பொருள் ஏற்படுகிறது. அது சொல்லாலே சொற்றொடர் வரை நடையாக வழங்கினாலும் சரி. அணி சேர்ந்தாலும் சேரா விட்டாலும் அதற்குப் பொருள் இருக்கிறதல்லவா? அந்தப் பொருளுக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன் ஒருவன் தான். அதிலே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘எல்லா அறிவியலும் இல்லை, பேரும் காதலும்தான் இருக்கிறது. வேறு என்ன இருக்கிறது? என்று அறியார் அவர்கள் , அந்த (போரின்) வகையிலே எல்லாப் பொருள்களையும் அடக்குகிறார் அவர். தொல்காப்பியத்திலே இவர் சொல்லாதுவிட்ட உண்மையைப் பிற்காலத்திலே வந்த ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பா மாலையில் சொல்லியிருக்கிறார். அந்த வென்றி இந்த வென்றி என்று தக்க வென்றி கோழி வென்றி யானை வென்றி இப்படியயல்லாம் சொல்லியிருக்கிறார் (குறிப்பு 10).
ஆகவே இந்த நால்வகுப்பாரையும் ஒவ்வொரு வகுப்பிலும் தலைவன் ஒரு சிறந்த தொழில் ஆற்றவேண்டும் என்று ஒருவகையான நல்ல போட்டி இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக அந்த இலக்கணத்தை அமைத்து வைத்திருக்கின்றனர். அதையயல்லாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அந்தத் தொல்காப்பியத்திலே சொல்லப்பட்டிருக்குகிறது, எத்தனை வகையான இலக்கியம் இருந்தது பழையகாலத்திலே!
“பாட்டு , உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்.”
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம் முதுசொல். பாட்டு என்று சொல்கிறது, என்னவென்றால் இப்பொழுது இருக்கின்ற பத்துப்பாட்டு எட்டுத் தொகை இருக்கின்றனவே அவையும், இந்த தொண்ணூற்று ஆறுவகைப் பனுவல் ( பிரபந்தம்) அத்தனையும் பாட்டு (General Poem).. உரை என்று சொல்லகிறது, எழுதப்படுகிற உரை விளக்கம் (வியாக்கியானம்) (Commentary) உரையும் அந்தக் காலத்திலே செய்யுளாக இருந்தது. அது எப்படி இருக்கும்? அல்லி இராணி மாலை, பவளக்கொடி மாலை பார்த்திருக்கிறீர்களா? அந்த நடையில் இருக்கும். யாருக்கு விளங்கும்? அப்படி இருந்தது அந்தக் காலத்திலே உரை.
பாட்டு , உரை, நூல்............நூல் என்று சொன்னது அந்தக் காலத்திலே அறிவியலைத்தான் ((Science-ஐ த்தான்). இசைநூல், நாடகநூல், மருத்துவநூல், கணியநூல் என்றால் சோதிடம்‡ இப்படிப்பட்ட அறிவியலுக்குத்தான் நூல் என்று பெயர். மதிவாணன் நாடகத் தமிழ்நூல் என்று இருக்கிறது.
‘என்றார் நூலுள்ளும்,’ ‘நூலோர்’ என்று திருவள்ளுவரும் பல இடங்களிலே குறிக்கின்றார். இப்போது நாம் என்ன செய்கிறோம். எல்லாவற்றையும் நூல் என்று வைத்து விட்டோம். நூல்நிலையம் என்ற ஒரு பொத்தக நிலையத்தை. Library என்றாலே Libran என்றால் பொத்தகம் என்று தான் பொருள் இலத்தீனிலே. அது பொத்தகச் சாலை என்றால் பொத்தகம் வைக்குமிடம்தான்.அறிவியல் -Science- என்று தனியாக வைத்திருக்கிறார்கள். இங்கே நாம் நூல்நிலையம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி அந்தப் பாட்டு உரை நூலே வாய்மொழி ..... வாய்மொழி என்றால் மந்திரம் . மந்திரம் என்ற சொல்லும் அந்தக்காலத்தில் வழங்கியது. முன்னுந்திறன் அதாவது Power of will மன்னுந்திறத்திலிருந்து வருகின்றது. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் என்று சொல்லப் பட்டிருகிறது. சிவனியச் சார்பாகத் திருமந்திரம் இருக்கிறது. மாலியச் சார்பாகத் திருவாய்மொழி இருக்கிறது.
அந்த வாய்மொழி, மந்திரம் இரண்டும் அந்தக் காலத்திலேயே வழங்கிய தூய தமிழ்ச் சொற்கள், இந்த வகையான நூல்களும் இருந்தன.
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே..... பிசி என்கிறது. விடுகதை (Riddle) பொய் என்று பொருள். அது ‘தட்டுக்கச்சேரியாக’ வருவதினாலே பிசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். சேலம் பக்கம் போவீர்களானால் ‘பொய் புடிக்கிறான்’, ‘பொய் புடிக்கிறான்’ என்று சொல்வார்கள். திருநெல்வேலி பக்கத்தில் கேட்டால் ‘புளுகுகிறான், ( பொய்) புளுகுகிறான்’ என்று சொல்வார்கள் , பிசி என்ற சொல்லானது அந்த இடத்திலே பொய் என்கிற கருத்திலே விடுகதையைக் குறிக்கிறது.
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம் - அங்கதம் என்று சொல்வது - பிற்காலத்திலே அது ஓர் எதிர்நூல் (Satire) என்பது போல்தான். அந்தக் காலத்தில் அதுதான் இலக்கியத் திறனாய்வு (Literary Criticism).
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல் ..... முதுசொல் என்றால் பழமொழி. பழமொழியைக் கூட அந்தக் காலத்திலே செய்யுள் என்று வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அது சொற்சுருக்கமாகவும் நல்ல மோனை மொழியோடு கூடியும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கின்றதனாலே பழமொழியையும் அந்த இலக்கியவகையோடு சேர்ந்தார்கள். ஒன்றாவது உண்டா இப்போது நான் சொன்ன ஏழுவகையிலே? ஆகையினாலே இப்பொழுது இருக்கிற தமிழ் இலக்கியம் முதல் இலக்கியமன்று என்பதை நீங்கள் உணர வேண்டும். தாள்புல் Aftermath என்கிற மறுகாப்பு இது. பழைய இலக்கியம் அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டன அந்தக் காலத்திலே. இந்த தமிழன், தன் பழைய இலக்கியம் இருக்கிறதாயிருந்தால் தமிழனுக்குப் பிற்காலத்தில் கண்திறக்கப்பட்டுவிடும் என்று ஒரு சாரார் அழித்தேவிட்டார்கள்.
ஒரு சிறுசெய்தி சொல்கிறேன். மலையாளத்தில் இருந்த அரசர் ‡ மலையாள அரசர்‡ திருவாங்கூர் அரசர் இளமையிலே இங்கிலாந்திற்குச் சென்றார். அவருடைய பத்மநாபசாமி கோவில் பூசகர் என்ன செய்தார்? போகக் கூடாதெனத் தடுத்தார். ஏனென்றால் அங்குப் போனால் கண்திறந்துவிடும் இவருக்கு ‡ அடிமையாகயிருக்கமுடியாது. இவர் சொல்கிற படியயல்லாம் நடக்கமுடியாது. தடுத்தார். அவர் மீறிச் சென்று வந்துவிட்டார். வந்தவுடன் தீயை வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான் அவர்கள் அக்கினி வணக்கந்தான் தெரியுமே. ஏன் எப்படி தீ வந்தது என்று கேட்டார். ‘அது தெய்வத்திற்குப் பிடிக்கவில்லை. அரசர் அக்கரைக்குப் போய்விட்டதினாலே தெய்வத்திற்குச் சினம் உண்டாகி அதனாலே தீப்பற்றி எரிந்து விட்டது’ என்றார்.
‘அது உனக்கு எப்படித் தெரியும்?’
‘தெய்வமே வந்து எனக்குச் சொன்னது?’
‘அப்படியானால் நாளைக்கு நான் எந்த வாசல் வழியாக கோவிலுக்குள் போகிறேன் என்று சொல் பார்க்கலாம்?’
‘நான் இப்போது சொல்லமாட்டேன் . நாளைக்குச் சொல்கிறேன்.’
மறுநாள், சரி அப்படியே இருக்கட்டும் பார்ப்போம் என்று போனார். அவரும் மறுநாள் வழக்கமாகப் புகும் வாசல் வழியாக அல்லாது வேறு ஒரு வாசல் வழியாகப் போனார் அன்றைக்கு.
அங்கே போன உடனே கேட்டார். ‡ ‘என்ன? நான் எந்த வாசல் வழியாக வருகிறேன் என்று சொல்லவில்லையே?’ என்று கேட்டார்.
‘மேலே நிலைமேல் எடுத்துப்பார் ’, ‘இந்த வாசல் வழியாகத்தான் வருகிறேன்’ என்று எழுதின சீட்டு வாசற்படியிலே செருகப்பட்டிருப்பதைக் காட்டினார். என்ன செய்தி தெரியுமா? நான்கு பக்கத்து வாசலிலும் வைத்துவிட்டு அவர் வந்தவுடன் பையன்களைவிட எடுக்கச் சொல்லி விட்டார். அவ்வளவுதான்! ( அவையோர் விரும்பும் நகையும் கையயாலியும் செய்கின்றனர்) இப்படி நடந்தது அது. இப்படி அவர்கள் துணிந்து செய்வார்கள்.
பாண்டியத்துரைத் தேவர் நடத்தின தமிழ்ச் சங்கம் இருக்கிறதே தமிழகத்திலே நல்ல தமிழ்க் கழகம் (சங்கம்). இது நல்ல தொண்டு செய்தது. இங்கேதான் நான் 1924 இல் பண்டிதத் தேர்வு தேறினேன். இந்தத் தமிழ்ச்சங்கத்தில் அப்பொழுது வித்துவான் தேர்வெல்லாம் ஏற்படவில்லை. எனக்கு முன்னாலே திரு. வேங்கடசாமி நாட்டார் ஒருவர்தான் தேறியிருக்கிறார். அந்தத் தேர்வு மிகக்கடினமான தேர்வு. ஒருவர் போவதில்லை. பிரவேச பண்டிதம், பால பண்டிதம் எழுதக் கூட போவதில்லை. இப்படி இருந்தது. அந்தப் பாண்டித்துரைத் தேவர் அரும்பாடுபட்டு ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடிகளையயல்லாம் சேர்த்து வைத்தார். ஒரு நாள் திடுமெனத் தீப்பட்டு ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் அரைமணி நேரத்திற்குள் எல்லாம் சாம்பலாயின . எப்படிப் போயிருக்கும்? அதைப் பாதுகாக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் இவர்களை‡தமிழர்களை‡தமிழரசர்களை ஏமாற்றி அடிமைப்படுத்தினார்கள். பழைய காலத்திலேயே அடிமைப்படுத்தி விட்டார்கள்.
சிலப்பதிகாரத்திலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் - அரசர்களுக்குள் மூவேந்தருமே பொதுவாக எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள். அதிலே பாண்டியன் எவ்வளவு ஆற்றல் சிறந்தவன்! அவன் அந்த வார்த்திகனை‡தட்சிணாமூர்த்தியுடைய தந்தை -அவர்கள் சேரநாட்டிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த அணிகலன்களைக் கண்டவுன் இதோ புதையல் என்று சொல்லிச் சிறையிலிட்டான். அந்த அதிகாரிகள் அவர்கள் சட்டப்படி -வழக்கப்படி தங்களுடைய பணியை -செயலைச் செய்து விட்டார்கள். உடனே அந்தக் ( காளிகோயிற்) கதவும் சாத்தப்பட்டது. அதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு காளிபத்தியும் இருந்தது. அதன்பிறகு செய்தி சொல்லப்பட்டது. “அப்புறம்சரி அழைத்துவா” என்றுசொல்லி‡ நயச்சொல் சொல்லி ( நலக்குறைவால் ஐயா நாக்குழறியபடி பேச்சைத் தொடர்கிறார்கள்) நயம் செய்து கேட்டுக்கொண்டு ஏராளமான நகைகளைத் திருப்பியதும் அல்லாமல் ஏராளமாக முற்றூட்டாகச் சில நிலங்களையயல்லாம் கொடுத்தார்கள் - அப்படியிருந்தும் அவனுடைய மனைவி என்ன செய்தாள்? ........ ( பாவாணர் ஐயா இழிவும் கழிவிரக்கமும் வாய்ந்த குறிப்பார்ந்த குரலோடு பேச்சைத் தொடர்ந்தார்கள்) ............கீழே விழுந்து வணங்கினான் என்றிருக்கிறது. நிலமகளுடைய சினத்தை -ஊடலைச் சிறிது தணித்தான் என்று மங்கள வழக்கிலே சொல்லப்பட்டு இருக்கிறது.
“ கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்கத் திருமார்பு நல்கி”- சிலப்பதிகாரம்
( இப்போது அவையினர் கையயாலி எழுப்பித் தொல்லை செய்தனர்) அதை நீங்கள் அறிந்து பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு அரசர்கள் ( குறிப்பு 11) அடிமைப்பட்டிருந்தார்கள் என்று. இதற்கெல்லாம் அந்த வெண்ணிறம் ஒன்றும் - அவர்களுடைய மூலமொழியின் வெடிப்பொலிகள் அந்த மூச்சொலி (Voiced unaspirate pounds) கலக்காத போலி ஒலிகள்தாம். ( மீண்டும் அவையிலிருந்து கையயாலி எழுந்து கேட்போருக்கு இடையூறாக) .......வேறொன்றுமில்லை இந்த ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன்.
குமரிநாட்டிலிருந்து பல்வேறு காலத்திலே பல்வேறு மொழி நிலையிலே, பல்வேறு திசையிலே மக்கள் பிரிந்து சென்றார்கள். அதிலே வடக்கே போனவர்கள்-முதலிலேயே ஒருசாரார் போனார்கள். அந்த ஒரு சாரார்தான் பாசுக் ( Bosque) மொழியைப் பேசுகிறவர்கள் ‘பிரனிசு மவுண்டன்’ (Pyreness Mountain) மலையிலே. (குறிப்பு 12) அதை நான் முதலமைச்சருக்குச் சொல்ல விரும்புகிறேன். இதைப்பற்றி விரிவாகச் சிறப்பாக எடுத்துரைக்கிறவர் பர். இலாகோவாரி (Dr.N. Lahovary) என்கிறவர். அவர் ‘திராவிடத் தோற்றமும் மேற்கும்’ (Dravidian Origin & The West) என்ற ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதிலே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். அந்த ‘பிரனிசு மவுண்டன்’ என்ற பாசுக்கு மொழி அத்தனையும் தமிழுக்கு நெருக்கமான திராவிட மொழிகள். இசுபெயின் நாட்டு எல்லையில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றை ஆராய்ச்சி செய்யவேண்டும். அப்படியே ஆரியம் வருமுன்னால் அந்தக் கிழக்கிலே இருந்த மொழிகளும் திராவிடத்துக்கு இனம் என்று காட்டியிருக்கிறார்.
நான் ‘ஊர் ’என்று சொன்னேன். ‘ஊரோடு’ நிறுத்தி விட்டேன். இன்னும் ஓரே சொல்லை மட்டும் கூறி நிறுத்திவிடுகிறேன். ‘புரம்’ என்று அந்தக் காலத்திலேயே பழைய கோட்டைகளையயல்லாம் கட்டின பிற்பாடு இந்த அரசர்கள் என்ன செய்தார்கள் - கோபுரங்கள் கட்டியிருந்தால் தங்களுக்கு இருந்தது போலவே அந்தத் தெய்வத்திற்கும் இருக்க வேண்டும் என்று தான் தாங்கள் அந்தச் சிற்றின்பத்திற்காக - இன்பத்திற்காக -அந்தக் தெப்பங்கள், நீரோட்டம், தெப்பத்தேர் இழுப்பது - இப்படியயல்லாம் தங்களுக்கு இருப்பதுபோலவே உயர்ந்த காவல் கோபுரம், தங்களுக்கு இருப்பதுபோலவே அவர்களுக்கு ஏற்றிவைத்தார்கள். இதிலே இந்த புரம் என்று சொல்கிற ஊரெல்லாம் கோவில் கோபுரங்கள் உள்ள ஊராகத்தான் இருக்கும் ( குறிப்பு 13) காஞ்சிபுரம் என்பது போல் ‘புரி’ என்று வருகிற ஊரெல்லாம் கோட்டை இருக்கிற ஊர்களாகதான் இருக்கும். ‘தந்தாசுதர்’- ‘டன் தாசுதர்’ என்று அங்கே எப்படி வழங்குகிறார்களோ அதுபோல் இந்த புரி என்கிறது வழங்கினதும். ( அவையினரின் கையயாலி சற்று நேரம் நீடித்தது) .... புரிதல் என்றே வரும். வளைதல் புரிசை ‡ பிரிதல் என்று சொன்னால் மதில். புரியினாலே சூழப்பட்ட நகர்களெல்லாம் புரி என்றே வரும். இந்தச் சொற்கள்தான் அங்கேயும் வழங்கி வந்தன....... (குறிப்பு 14) ...... தச்சன்புரி, எடின்பரோ, சிதர்ன்பரன் இப்படியயல்லாம் அந்த இடங்கள் இன்னும் அங்கே வழங்குகின்றன................ ( மீண்டும் அந்த சிலர் கையயாலி எழுப்பினர்). இதற்கெல்லாம் மூலம் இங்கே தமிழில்தான் இருக்கிறது. இதோடு நிறுத்திவிடுகிறேன்.
ஆரியமொழிகளைப் பேசுகிறவர்களிலே கிரேக்கர் ஒருசாரார். இவர்களெல்லாம் காசுபியன் கடல் பக்கத்திலே- தென் பாகத்திலே குடிய¼றினவர்கள் - குடியேறி வழங்கினவர்கள். கிரேக்க மொழிக்கு நெருக்கமானது அது. அதாவது வேதமொழிக்கு மூலமான மொழி ‡ இதற்கு நெருக்கமானது. ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலே நாகரிகமான நிலையில் இல்லை. ஆடுமாடு மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக இருந்தவர்கள். கிரேக்கர்களுக்கென்று ஒரு தனி நாடு இருக்கிறது. செருமனிக்கு ‡ பிரான்சுக்கு இருக்கின்றன. அமெரிக்காவுக்கு அவர்கள் குடியேறிச் சென்றாலும் எந்த நாட்டிலிருந்து வந்தாய் என்றால் செர்மனியிலிருந்து வந்தேன் பிரான்சிலிருந்து வந்தேன் என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால் இவர்களுக்கு -வேத ஆரியர்க்கு முன்னாலே எங்கு இருந்து வந்தான் என்று சொன்னால் இவர்களுக்கு நாடும் இல்லை; ஒன்றுமே இல்லை. ஆகவே நாடோடியாக-குடும்பம் குடும்பமாக வந்து சேர்ந்தார்கள் ( மீண்டும் அவையோரின் கையயாலி) இங்கே வந்து சேர்ந்த உடனேஅவர்களுடைய தெய்வங்கள்‡ எல்லாம் சிறு தெய்வங்கள் வேதத்தில் தெய்வத்தை நீங்கள் பார்த்தீர்களானால் அதில் கடவுளே இல்லை. சோம பானத்தை (சோமக்கள்ளை )ப் போய்த் தெய்வமாக வணங்கிப் போற்றி மிகப் பாராட்டி இருக்கு வேதத்திலே நூற்றிருபது மந்திரம், (குறிப்பு 15) சோமபானத்தைப்பற்றி அந்தப் பானகம் பற்றி “எப்படித் ‘தோத்தரிக்க’வேண்டும் தெரியுமா?” அதையயல்லாம் இங்கே சொல்ல நேரமில்லை. மேக்தனால் (A.A. Macdonell) போல் எத்தனையோ பேர் அதைப்பற்றியயல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் . ஆகவே மிகத் தாழ்ந்த நிலையிலே உள்ளவர்கள். அந்நிலையிலே கிழக்கே முதலிலே சிந்து ஆற்றுப் பக்கம் இருந்தார்கள் - சிந்துவெளியிலே - அதற்கப்புறம் கிழக்கே தள்ளி நடுவிலே -அந்த பிரமவத்தம் என்கிற பெயர் வைத்துக்கொண்டார்கள் . மேலும் கிழக்கே காளிக்கோட்டம் ( கல்கத்தா) வரையிலே போய் ஆரியவர்த்தம் என்று வட இந்தியாவிற்கெல்லாம் பெயர்வைத்துக் கொண்டார்கள். அங்கே போனபிறகுதான் அந்தக் காளிவணக்கத்தை மேற்கொண்டார்கள். இது ( மீண்டும் அந்தச் சிலரின் கையயாலி) தமிழர்களுக்குரிய பழக்கம் அங்கே இருக்கிற அந்தக்காலத்தில் தெய்வங்களிற் கூட - சொல்லப் போனால் சில இரண்டொரு தெய்வங்களைப் பற்றிக்கூடப் பழைய தொடர்பைக்கூட நாம் காட்டிக்கொள்ளலாம்.
வருணன் என்று சொல்வார்களே அந்த வருணன் என்ற சொல் தமிழிலே வாரணன் என்று திரியும் ( குறிப்பு 16). (வாரணம் -கடல், வாரணன் -கடலோன் ) அது நெய்தல் நிலத் தெய்வம், வாரணன் கடல் - அது மேரினிசம் (Marinism) என்றிருக்கிறது. இலத்தீனிலே மேரினிசம் தர்சி ((Marinism Terce) Marine என்றாலும் கடல். இவர்கள் பிற்காலத்திலே போய் இந்தக் கடல் தொடர்பு அற்றுப்போனதினாலே வாரணன் என்பதை வருணன் என்று பெயர் வைத்துவிட்டார்கள். இப்பொழுதுங்கூட வருணசெபம் என்று மழைதெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே தெற்கே வந்த பிற்பாடு ‡ தமிழரோடு தொடர்பு கொண்ட பிற்பாடு கடல்தெய்வம் என்றே வழங்கிவிட்டார்கள். ஆனால் இங்கே தொல்காப்பியத்திலே வருணன் மேய பெருமணல் உலகமும் என்றிருக்கிறது. அது வாரணன் மேய ஏர் மணலுலகமும் என்று இருந்திருக்கவேண்டும் முற்காலத்திலே ( குறிப்பு 17,18)
அவர்கள் இங்கு வந்து சேர்ந்தவுடனே அந்தக் காளி வணக்கத்தை முதலில் வைத்துக்கொண்டார்கள்.... ( மீண்டும் கையயாலி ) பிறகு முருகன் வணக்கம் சிறந்தது என்று முருகன் வணக்கத்தையும் வைத்து கொண்டார்கள். அதற்கப்புறம் சிவமதம் திருமால் மதம் இரண்டும் தமிழர் மதங்களென்று தெரிந்துக்கொண்டார்கள். ஆகையினாலே தங்களுடைய வேத வணக்கத்தையும் அவர்களிடத்திலே செலுத்தமுடியவில்லை. இந்த இரண்டையும் அவர்கள் தழுவிக்கொண்டார்கள்- இருமதங்களையும்.
ஆனால் தமிழர்கள் இவர்கள் வயப்படுத்துவதற்கு என்ன செய்தார்கள் என்றால், முத்திருமேனி ( திரிமூர்த்தி ) க் கொள்கை என்ற ஒரு புதுக்கொள்கையைத் தோற்றுவித்தார்கள். திரிமூர்த்தி - முத்திருமேனிக் கொள்கை ஒரு பெரிய சூழ்ச்சியான புணர்ப்பு அது. என்ன செய்தார்கள் என்று சொன்னால் திருமால் மதம், சிவமதம் இரண்டும் தனிமதங்கள் என்பதை அறியவேண்டும். ( மீண்டும் கையயாலி) எப்படி? கிறித்தவமும் இசுலாமும் எப்படி இரண்டு மதங்களும் வெவ்வேறோ அல்லது இசுலாமும் யூதர்நெறியும் எப்படி இரண்டும் வெவ்வேறு மதமோ அதுபோல இந்த மாலியம் ( வைணவம்) சிவனியம் ( சைவம்), இரண்டு வெவ்வேறு மதங்கள்.
இப்போது திருநீறு பூசுகிறவனைப் போய் “நீ திருமண் சாத்து சாத்து” என்றால் சாத்துவானா? திருமண் சாத்துகிற வனைப்போய் நீறு பூசு என்றால் பூசுவானா? அந்தக் திருவானைக் காவார்க்கும் திருவரங்கத்தார்க்கும் உள்ள சண்டைகளையயல்லாம் இந்த எண்பனுவல் எழுதினார்களே ‘அட்டபிரபந்தம்’ எழுதின பிள்ளைப்பெருமாள் ( ஐயங்கார்) என்னும் அழகிய மணவாளதாசர் அவர்களைப் பற்றிச் சொல்லக் கருதினேன் (குறிப்பு19) “இனி, உங்களுக்கு ஏதேனும் ஐயுறவு இருந்தால் நீங்கள் ஒரு பட்டிமன்றமாக நடத்துங்கள்” என்றேன், மூவாண்டிற்கு முன்னாலே நான்... இந்த சமசுகிருகத்திலே வேர்ச்சொல் வேற்றுமொழி என்று காட்டியிருக்கிறார்கள், இவர்.... (மீண்டும் கையயாலி) வாணியை (சரசுவதியை ) வேற்று மொழி வேர்ச்சொல் என்று காட்டியிருக்கிறார்கள். அவையயல்லாம் தமிழில்தான் இருக்கின்றன. இவற்றை நாம் நீங்குவதற்கு - மீட்பதற்கு தமிழ்தான் மூலம் என்று காட்டுவதற்கு நீங்கள் ஒரு பட்டி மன்றம் ஏற்படுத்துங்கள். அதில் செருமானியர் , பிரஞ்சியர் , ஆப்பிரிக்கர், அமெரிக்கர், ஆங்கிலேயர் யாராக இருந்தாலும் சரி ‡ எதிர்த்தாலும் சரி ‡நாங்கள் நாட்டுகிறோம்.... (நெடுநேரம் அவையினர் கைதட்டினர். ஐயா பாவாணர் அவர்கள் தம் உரையினை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் ஆற்றிய கடைசி உரை இதுதான்.)
எண்கள் குறிப்பிடப்பட்ட இடங்களில் காட்டப்பட்டுள்ள கருத்துக்களை ஐயா பாவாணர் அவர்களின் நூல்களில் காணும் இடங்கள்.
குறிப்பு எண். பாவாணரின் நூல் பக்கம்
2 வடமொழி வரலாறு 19,20
ஒப்பியன் மொழிநூல் 5
3 தமிழர் வரலாறு 99
4 தமிழலக்கிய வரலாறு 59
தமிழர் வரலாறு 50
5. தமிழர் வரலாறு 48,50
7 தமிழ் வரலாறு 106
8 வடமொழி வரலாறு 281
9 வண்ணனை மொழி நூலின்
வழுவியல் 36
The Lemurian Language
and its Ramifications 43
10 தமிழ் வரலாறு 244
11 தமிழர் வரலாறு 231
தமிழிலக்கிய வரலாறு 181
12 ஒப்பியன் மொழிநூல் 55
13 தமிழர் வரலாறு 150
14 தமிழிலக்கிய வரலாறு 31
15 The Lemurian Language
and its Ramification 32
16 ஒப்பியன் மொழிநூல் 154
தமிழர் வரலாறு 84
18 தமிழலக்கிய வரலாறு 135
19 தமிழலக்கிய வரலாறு 91,194
குறிப்பு எண் 1 பற்றிய செய்தி திரு. மதிவாணன் அவர்களின் ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்ற நூலுக்குப் பாவாணர் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரையில் காணலாம்.
குறிப்பு எண்.6 செம்பரிதி இதழ் பரிதி -1 கதிர் 8 இல் திரு. தி.நா அறிவுஒளி அவர்களின் ‘குமரிக்கண்டம்’ கட்டுரையில் நாம் காணும் செய்தி - “ஊர் என்று ஊரில் நிலாக் கடவுளின் கோவிலின் இரண்டாம் மாடம் நெபுசட் நேச்சராலும் நெபோணிதசாலும் (Nabonidus) கி.மு.555-538 இல் கட்டமாகக் கட்டப்பெற்றது. அதில் இரண்டு முரடான தமிழகத் தேக்கு மரங்கள் தொல்பொருள் ஆய்வாளரால் கண்டறியப்பட்டுள்ளன. அறிஞர் இராசம் ஒரு முடங்கலில் ‘இம்மரங்கள் இந்தியாவிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழிக் கொண்டுவரப்பட்டு இருக்கும்’ என எழுதுகிறார்.
குறிப்பு எண் 17 - மேலும் இது தொடர்பான செய்திகளை திரு. மதிவாணன் அவர்களின் இலெமூரியா முதல் அரப்பா வரை என்ற நூலின் 160 ஆம் பக்கத்தில் காணலாம்.
நன்றி:
எழுத்து வடிவம்: அய்யா திரு. சாத்தனூர் மு. ஆறுமுகம்
(மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பந்தயத்திடலில் நடைபெற்ற பொதுநிலைக் கருத்தரங்கில் 5.1.1981 அன்று பாவாணர் அவர்கள் பேசிய சொற்பொழிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக