மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

சனி, 7 நவம்பர், 2009

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

இரா.திருமாவளவன்

அண்மைக் காலமாக நம் அறிஞர்கள் சிலர் தமிழ்ச் சொற்றடர்களில் புணரியல் திருத்தங்களைச் செய்து வருகின்றனர். இவற்றுள் ஏற்புடையனவும் உள; ஏற்றுக் கொள்ள முடியாதவையும் உள.

அவரவர் மனப் போக்கில் செய்யப்படும் விதி ஆக்கங்களால் தமிழ் இலக்கண அமைப்பு சீர்கெடும் நிலை ஏற்படும்.

நெடில் அடுத்த லகர ளகர வீறு 'கள்' விகுதி சேருங் காலைத் திரியாது எனும் விதி தற்கால் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றாகி விட்டது.

  • நாள் + கள் = நாள்கள்
  • கால் + கள் = கால்கள்
  • கோள் + கள் = கோள்கள்
  • வேல் + கள் = வேல்கள்
  • தாள் + கள் = தாள்கள்
இவ்விதி இக்கால், 'கள்' விகுதி என்ற நிலையினின்றும் நீண்டு ஏனைய வருமொழிகளுக்கும் பொருந்தும் எனும் பொருளில் முனைவர் தமிழண்ணல் அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார். இது தமிழ் நேசன் நாளிதழில் முன் பக்கத்தில் கட்டம் போட்டு வெளியிடப்பெற்றது.

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

  1. மேல் + கணக்கு
  2. கால் + கடுக்க
  3. பால் + பசு
  4. நாள் + கோள்
  5. பால் + பழம்
  6. கால் + சட்டை
  7. மேல் + படிப்பு
  8. கால் + புள்ளி
  9. கால் + பந்து
  10. நூல் + பா
  11. மேல் + கொண்டு
  12. பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம்.

இதற்குத் தமிழில் காணப்படும் தொடர் வகைகளை அறிந்திருப்பது இன்றியமையாதது. தொடர் என்பது தொகை நிலைத் தொடர் என்றும் தொகா நிலைத் தொடர் என்றும் இருவகைப் படும். தொகை எனின் மறைந்திருப்பது என்று பொருள். தொகைநிலைத் தொடர்களுள்

  • வேற்றுமைத் தொகை
  • உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • உம்மைத் தொகை
  • வினைத் தொகை
  • பண்புத்தொகை
  • இருபெயரொட்டுப் பண்புத் தொகை
  • அன்மொழித்தொகை
வலிமிகும் மிகா இடங்களுக்கு எவ்வாறு இத்தொகை நிலைகள் முகாமையானவையாக விளங்குகின்றனவோ அவ்வாறே லகர ளகர வீறு புணரியலுக்கும் முகாமையானவையாக விளங்குகின்றன.

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:

௧. கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.

௨. நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது. இங்கு 'ள்" ட் ஆகத் திரியாது.

௩. பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும்

௪. பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

௫. எழுவாய்த் தொடர்களிலும் திரியாது கால் கடுத்தது, தோள் புடைத்தது, வேல் பாய்ந்தது என்றே இயல்பாகப் புணரும்.

இனித் திரியும் இடங்கள் சிலவற்றைக் காண்போம்.

௧. கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

௨. பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

௩. மேல் + படிப்பு - மேற்படிப்பு
௪. மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று

தொடர்ந்து எனும் பொருளைக் குறிக்கும் மேல் திரிந்தே புணரும்.

௪. கால் எனும் பகுதியைக் குறிக்கும் பின்னத்தின் பின் திரியும்.

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

௫. நூலின் நுட்பத்தைக் குறிக்கும் பா
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

௬. பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் ,

கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா?

இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி. கால் + பந்து = காற்பந்து என்றே எழுதப்படவும் சொல்லப்படவும் வேண்டும். இப்படித்தான் நீண்ட காலமாக வழக்கிலிருந்தது . இடையில் சிலர் ஏற்படுத்திய குழப்பத்தால் பலரும் குழம்பியுள்ளனர்.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும். எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

1 கருத்து:

  1. வணக்கம் ஐயா.

    மிகவும் பயனான இலக்கணச் செய்தி. இவ்விடுகையை எங்கள் பள்ளி வலைப்பதிவில் சேர்ப்பதற்குத் தங்களின் அனுமதியை வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு